தேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர்

by Nila | June 15, 2019 12:15 am

சிவகங்கை மாற்று திறனாளி பெண் தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க சமூக வலைதளம் மூலம் தஞ்சை வாலிபர் நிதி திரட்டி வழங்கினார்.

சிவகங்கை அடுத்த சக்கந்தி மில் கேட் பகுதியைச் சேர்ந்தவர் சுபஜா 27. இவரது சொந்த ஊர் நாகர்கோவிலை அடுத்த வெள்ளக்கோடு. பெற்றோர் இறந்து விட்டனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாகர்கோவிலில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் முழுங்காலுக்கு கீழே இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து சிவகங்கையில் தனியார் மில்லில் செயற்கை கால் உதவியுடன் வேலை பார்த்து வருகிறார்.

தற்போது சுபஜா தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூடைப்பந்து அணியில் விளையாடி வருகிறார். கோவையில் நடந்த போட்டியில் ஆறு பதக்கங்களை வென்றார்.வரும் 21 முதல் 30ம் தேதி வரை பஞ்சாப்பில் நடைபெறும் தேசிய போட்டிக்கு தேர்வாகி உள்ளார். நிதியுதவி கோரி சிவகங்கை கலெக்டரிடம் சுபஜா மனு அளித்தும் நிதி கிடைக்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு சமூக வலைதளங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டுள்ளனர். இதைப் பார்த்த தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சேரன் 26 என்பவர் சமூக வலைதளங்களில் உள்ள தன் நண்பர்கள் மூலம் 23 ஆயிரத்து 590 ரூபாய் நிதி திரட்டி சுபஜாவிடம் வழங்கினார்.

சேரன் கூறியதாவது: முதலில் அந்த பெண்ணின் வங்கி கணக்கு நம்பரை சமூக வலைதளத்தில் போட்டேன். ஆனால் யாரும் பணம் வழங்கவில்லை. தொடர்ந்து சமூக வலைதளத்தில் உள்ள நண்பர்களிடம் ‘கூகுள் பே’ மூலம் பணத்தை கொடுக்கலாம் என தெரிவித்தேன். பின் நண்பர்கள் 10 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அனுப்பி வைத்தனர். ஒரு வாரத்தில் 23 ஆயிரத்து 590 ரூபாய் சேர்ந்தது. என்னால் முடிந்த அளவிற்கு 2000 ரூபாய் வழங்கினேன். நேரில் சென்று பணத்திற்கான ‘செக்’கை சுபஜாவிடம் கொடுத்து வந்தேன். இவ்வாறு கூறினார்.

Source URL: http://tamilnaadu.news/archives/778