தரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல்

by Nila | June 15, 2019 12:05 am

நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு, பாண்டவர் அணி சார்பில், வீடியோ வெளியிட்ட விஷாலுக்கு, சரத்குமாரின் மகள் வரலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், விஷால் தலைமையில், பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில், சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.வரும், 23ம் தேதி, சென்னை, அடையாறில் உள்ள, மகளிர் கல்லுாரி வளாகத்தில், தேர்தல் நடக்க உள்ளது.தேர்தலை முன்னிட்டு, பாண்டவர் அணி சார்பில், விஷால், வீடியோ ஒன்றை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். 
அதில், சரத்குமார், ராதாரவி ஆகியோரை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் உள்ளன. இதற்கு, சரத்குமாரின் மகளும், விஷாலின் நெருங்கிய தோழியுமான வரலட்சுமி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும், டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், வரலட்சுமி கூறியிருப்பதாவது:
விஷால் அவர்களே… இந்த வீடியோ மூலம், மிகவும் தரம் தாழ்ந்து போய் விட்டீர்கள் என்பதை அறிந்து, அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளேன். உங்கள் மீது இருந்த மரியாதையும் போய் விட்டது.நீங்கள் சொல்வது போல, சரத்குமார் குற்றம் செய்திருந்தால், ஜெயிலுக்கு சென்றிருப்பார்.இதுபோன்ற கீழ்தரமான, வீடியோ, உங்கள் தரத்தை காட்டுகிறது. உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களின் பொய் மற்றும் இரட்டை வேடத்தை, அனைவருமே அறிவர். நீங்கள், என் ஓட்டை இழந்துள்ளீர்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக, பல ஆண்டுகளாக தகவல் பரவியது. ஆனால், சமீபத்தில், ஆந்திர தொழிலதிபரின் மகளுடன், விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.இதற்கிடையில், பாக்யராஜ் அணியினர், நேற்று நடிகர் கமலை சந்தித்து, ஆதரவு கோரினர். நடிகர் சங்க தேர்தலில், ஓட்டளிக்கும் உரிமையை, சரத்குமார் இழந்துள்ளதால், தேர்தல் குறித்து கருத்து எதுவும் கூற மறுத்து விட்டார்.

Source URL: http://tamilnaadu.news/archives/775