8 மாவட்டங்களில் அனல் அடிக்கும்

by Nila | June 12, 2019 10:28 pm

சென்னை : ‘சென்னை உட்பட, எட்டு மாவட்டங்களில், இன்றும் அனல் காற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும்’ என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில், நேற்று அதிகபட்ச வெயில் பதிவானது.கோடை வெயிலின் தாக்கம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று பகலில், பல இடங்களில், அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.திருவள்ளூர், சென்னை, வேலுார், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலுார் மற்றும் கடலுார் மாவட்டங்களில், இன்றும் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள், காலை, 11:00 முதல், 4:00 மணி வரை, வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, திருத்தணி மற்றும் சென்னை விமான நிலையத்தில், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. 

சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, வேலுார், 41; கடலுார், புதுச்சேரி, திருச்சி, 40; காரைக்கால், நாகை, 39; கரூர் பரமத்தி, 37; சேலம், 35; நாமக்கல், துாத்துக்குடி, 34; கோவை, 32; கன்னியாகுமரி, 30; குன்னுார், 23; வால்பாறை, 22; கொடைக்கானல், 18 டிகிரியாக, வெப்பம் இருந்தது.தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், பரவலாக பெய்யும் என, கணிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘வாயு’ என்ற, புயலாக மாறியுள்ளது. இந்த புயல், மாலத்தீவில் இருந்து, வடக்கு நோக்கி நகர்ந்து, கர்நாடகா, மஹாராஷ்டிரா வழியே, கட்ச் வளைகுடா நோக்கி செல்லும் என, வானிலை மையம் கணித்துள்ளது.நேற்று காலை, 8:30 உடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், பேச்சிப்பாறையில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி, 9; நீலகிரி, 7; பாபநாசம், 6; குழித்துறை, நாகர்கோவில், 5; சின்னகல்லார், வால்பாறை, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Source URL: http://tamilnaadu.news/archives/756