ஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்குமா.. இங்கு எதையும் திணிக்கக்கூடாது! கமல்ஹாசன் அதிரடி

by Nila | June 2, 2019 12:48 am

இந்திய அரசின் கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தின் ஒரு அம்சமாக, நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை இந்திய அரசு அமல்படுத்த பரிந்துரைக்க கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதன் ஒருபடியாக, #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழகத்திலும் #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ‘நான் ஹிந்திப் படத்தில் நடித்தவன், இந்தியாவில் அவரவர் மொழியை மதிக்கும் கருத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆனால், இங்கு எதையும் திணிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து.

விருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக தமிழர்கள் தம் மொழியை விட்டுவிட்டு, இன்னொரு மொழியை இனி ஏற்றுக்கொள்வது என்பது கஷ்டமாக உள்ளது. திணிக்கக்கூடாது என்பதுதான் வேண்டுகோள்.

இதற்கு முன்பும் இதை அழுத்தி கூறியுள்ளோம். ஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்கிற பேச்சை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் அப்படி நினைத்ததில்லை’ என தெரிவித்துள்ளார்.

Source URL: http://tamilnaadu.news/archives/713