கடும் வெயிலால் திருத்தணி மலைப்பாறை வெடிப்பு: பெரும் சத்தத்தால் குடியிருப்பு மக்கள் பீதி

by Nila | June 2, 2019 12:47 am

திருத்தணி மலைப்பகுதியில், திடீரெனப் பாறை வெடித்த சத்தம் கேட்டு, அங்கு வசிப்போர் அலறியடித்தபடி ஓடி வந்தனர். கடும் வெயில் காரணமாக தான் பாறை வெடித்ததாக,குடியிருப்போர் கூறுகின்றனர்.இது சம்பந்தமாக, ஆய்வு செய்ய, கனிம வளத் துறைக்கு, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர்மாவட்டம், திருத்தணி நகராட்சி,அனுமந்தாபுரம், வன துர்க்கையம்மன் கோவில் அருகே உள்ள மலைப்பகுதியில், 60க்கும்மேற்பட்ட குடும்பத்தினர், வீடு கட்டி, பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். இங்கு, நேற்று மதியம், குடியிருப்புகள் நடுவே இருந்த பாறை ஒன்று, திடீரென வெடிக்கும் சத்தம் கேட்டது.அப்போது, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குழந்தைகள் முதல், முதியோர் வரை, அலறி அடித்து, வெளியே வந்தனர்.சத்தம் வந்த இடத்தில் பார்த்தபோது, பாறையில் விரிசல் ஏற்பட்டு, புகை வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.தகவல் அறிந்ததும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், பவணந்தி, தாசில்தார், செங்கலா ஆகியோர், சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

இது குறித்து, கோட்டாட்சியர், பவணந்தி கூறியதாவது:தமிழகத்திலேயே அதிகபட்ச வெயிலாக, திருத்தணியில், 44 டிகிரிசெல்ஷியஸ்வெயில் கொளுத்துகிறது.இந்நிலையில், அதிக வெயில் காரணமாக, நேற்று மதியம், இங்குள்ள பாறை திடீரென வெடித்ததாக, அங்கு வசிப்பேர் கூறுகின்றனர். இந்தப் பாறை வெயிலால் வெடித்ததா அல்லது யாராவது பாறையை உடைக்கமுயற்சித்தனராஎன, ஆய்வு செய்ய, மாவட்டக் கனிம வளத் துறை அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்யப்படும்.அதுவரை, மக்கள் அந்தப் பக்கம் போகாதபடி, பாறை சுற்றியும், தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Source URL: http://tamilnaadu.news/archives/710