இழுபறி! உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி.. மீட்கப்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்புகள்

இழுபறி! உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி.. மீட்கப்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்புகள்
May 30 23:20 2019 Print This Article

உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி இழுபறியாகி வருவதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை பஸ் ஸ்டாண்ட், 1964ல் கட்டப்பட்டது. அதற்கு பிறகு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட நகர பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழநி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன.பஸ் ஸ்டாண்டிற்கு தினமும், 400க்கும் மேற்பட்ட பஸ்கள், 1,500 முறைக்கு மேல் வந்து செல்கின்றன. பஸ்கள் மூலம், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.உடுமலை பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிற்பதற்கான ‘ரேக்’ வசதிகள் மற்றும் பயணிகள் காத்திருப்பதற்கான வசதிகள் என, அடிப்படை வசதிகள் இல்லை.பஸ் ஸ்டாண்ட், குறுகியதாக உள்ளதால், பஸ்கள் வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு, ஆறு வழித்தடங்கள் உள்ளதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. பஸ்கள் எளிதாக வந்து திரும்பி செல்ல முடியாத சூழல், நெரிசல் என, அதிகளவு சிக்கல்கள் உள்ளது.பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், குறுகிய பஸ் ஸ்டாண்டால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதிகரித்து வரும் பஸ்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.இதற்காக, வி.பி.,புரத்திலிருந்த, 420 ஆக்கிரமிப்பு வீடுகள், 10 ஆண்டுக்கு முன் அகற்றப்பட்டது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால், மீட்கப்பட்ட நிலம், தனியார் வாகனங்கள், பொக்லைன் வாகனங்கள், தற்காலிக கடைகள், வாகன விற்பனை நிலையம் என, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.மேலும், லாட்டரி, கஞ்சா, மது விற்பனை என சமூக விரோத செயல்களும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாற்றப்பட்டுள்ளது.அதே போல், பஸ் ஸ்டாண்டில் கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக, பயணிகள் நடக்க கூட வழியில்லாமல், பஸ் வழித்தடத்திலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. 
ஆனைமலை, வால்பாறை, திருப்பூர், கோவை, பழநி வழித்தடத்தில் வரும் பஸ்கள், உள்ளே நுழைவதும், வெளியே செல்லும் வழித்தடத்திலும் நிறுத்த வேண்டியுள்ளது.டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்கள் மற்றும் வழித்தடங்களில் நிற்க வேண்டிய பஸ்களுக்கு போதிய இட வசதி இல்லாததால், தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், பயணிகளும் குழப்பமடைந்து வருகின்றனர்.இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு, மேற்கு பகுதியிலுள்ள நகராட்சி இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பெட்ரோல் பங்க் அகற்றப்பட்டு, அந்த இடமும் மீட்கப்பட்டு, அந்த இடமும் பல மாதமாக வீணாக உள்ளது. எனவே, 10 ஆண்டுக்கும் மேலாக இழுபறியாகி வரும் பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘அனுமதி வந்ததும் பணிகள் துவங்கும்’ 
நகராட்சி கமிஷனர் ராஜாராம் கூறுகையில்,’ திட்ட வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரித்து, அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றதும் பணிகள் துவங்கும்,’ என்றார்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.