சூரிய ஒளியில் இயங்கும் ஆட்டோ

by Nila | May 27, 2019 10:50 pm

நாகர்கோவில் : தமிழகத்திலேயே, முதல் முறையாக, சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை, நாகர்கோவிலைச் சேர்ந்த, 66 வயது மெக்கானிக் வடிவமைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறைச் சேர்ந்தவர், முருகன், 66. ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், ஆட்டோ மெக்கானிக்காக இருக்கிறார்.தற்போது, நாகர்கோவிலில் வசிக்கும் இவர், சூரிய சக்தி மின்சாரம் மூலம் இயங்கும் ஆட்டோவை வடிவமைத்து, சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வருகிறார். 

முருகனின் மகன் கண்ணன், சாப்ட்வேர் இன்ஜினியராக, புருனே நாட்டில் பணியாற்றி வருகிறார்.முருகன் புருனே சென்றிருந்த போது, அந்த நாட்டில், தெரு விளக்குகள், சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்குவதை பார்த்து, அதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.நாகர்கோவில் திரும்பிய முருகன், சூரிய சக்தி மின் உற்பத்தி குறித்து, ஏழு ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டார். சூரிய சக்தி மின்சாரம் மூலம் இயங்கும் பல உபகரணங்களை உருவாக்கிய அவர், தற்போது, சூரிய ஒளியில் இயங்கும் ஆட்டோவை வடிவமைத்துள்ளார்.முருகன் கூறியதாவது:முதலில், என் வீட்டுக்கு, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனலை உருவாக்கினேன். கடையநல்லுாரில், இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கடைக்கு, சூரிய சக்தி மின்சார வசதி செய்து கொடுத்தேன். 

தற்போது வரை, நான் கண்டுபிடித்த மின் கருவிகள், எந்த பழுதுமின்றி இயங்கி வருகின்றன. என் ஆர்வத்தை பார்த்த என் மகன் கண்ணன், எனக்கு, சூரிய சக்தி உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் உதிரிபாகங்கள் கடை வைத்து கொடுத்தார்.பின், 15 ஆயிரம் ரூபாய்க்கு பழைய ஆட்டோ ஒன்றை வாங்கி, அதில் சில மாற்றங்கள் செய்தேன்.தொடர்ந்து, சூரிய சக்தியை ஈர்க்கும், நான்கு சோலார் பேனல்கள் தயார் செய்து, ஆட்டோவின் மேல் பகுதியில் பொருத்தினேன். 

மேலும், 48 வோல்ட், 160 ஆம்பியரில் இயங்கும் பேட்டரி மற்றும், 1,000 வோல்ட் திறன் கொண்ட மோட்டார் பொருத்தி, அதை, சோலார் பேனலுடன் இணைத்துள்ளேன்.இதற்கு மொத்தமாக, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. இந்த ஆட்டோ, பகலில், 140 கி.மீ., வரையும், இரவில், 70 கி.மீ., வரையும் இயங்கும்.கடந்த ஓராண்டாக, இந்த ஆட்டோவுக்கு எரிபொருள் மற்றும் பழுது பார்ப்புக்கு என எந்த செலவும் செய்யவில்லை. என் அடுத்த திட்டமாக, சூரிய சக்தி மூலம் இயங்கும் காரை வடிவமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன். 

சூரிய சக்தி மூலம் வாகனங்கள் இயக்கப்படுவதால், ஒலி மற்றும் காற்று மாசு குறையும். உலகில் பல நாடுகள், சூரியசக்தி மின் உற்பத்தி தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளன.ஆனால், இந்தியாவில் இத்திட்டம், 1985ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டும், இதுவரை பெரியளவில் மேம்படுத்தப்படவில்லை.இவ்வாறு, அவர்கூறினார்.

Source URL: http://tamilnaadu.news/archives/639