ஒரு ஆண்டு கூட்டப்பட்டது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59 ஆக உயர்வு

ஒரு ஆண்டு கூட்டப்பட்டது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59 ஆக உயர்வு
May 08 09:37 2020 Print This Article

சென்னை,

தமிழக அரசு திடீரென்று அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. இது குறித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘தமிழ்நாடு அரசு பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 வயதாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59ஆக உயர்த்த அரசு முடிவு செய்து, அதற்கான ஆணையை வெளியிடுகிறது. இந்த மாதம் மே 31-ந்தேதியில் இருந்து ஓய்வுபெறும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த ஆணை பொருந்தும்.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள், அரசியல் சாசனப்படி அமையப்பெற்றுள்ள நிறுவன பணியாளர்கள், மாநில அரசு கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும். தமிழ்நாடு அடிப்படை விதிகளில் இதற்கான திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதால் இந்த மே மாதம் (எந்தத் தேதியிலும்) ஓய்வு பெறுவோரும் இந்த அரசாணையால் பயனடைவார்கள். இந்த உத்தரவின் மூலம் தமிழகத்தில் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைகிறார்கள். தலைமைச் செயலகத்தில் 300 அரசு ஊழியர்கள் பயனடைகின்றனர்.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின்படி இந்த ஊழியர்கள் அடுத்த 2021-ம் ஆண்டு மே மாதம், அவர்களின் 59-வது வயதில் ஓய்வு பெறுவார்கள்.

இந்த மே மாதம் 25 ஆயிரத்து 300 ஊழியர்களும் ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டிய பணிக்கொடை ரூ.2,763.64 கோடி, லீவு சம்பளம் ரூ.2,220.73 கோடி என மொத்தம் ரூ.4,984.37 கோடி இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருந்தது.

தற்போது இப்போது ஏப்ரல் மாதம் முடிந்துபோன காலகட்டத்தை கழித்தாலும், இவ்வாறு ஓய்வுபெறும் வயதை 59ஆக உயர்த்தியதால் அரசுக்கு ரூ.4,500 கோடி மிச்சமாகிறது. மேலும் அவர்கள் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியமாக வழங்க வேண்டிய ரூ.500 கோடியையும் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் கோடி அரசுக்கு மிச்சமாகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, “இந்த அரசாணை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏற்படுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கவும், அரசு ஊழியர்களின் அனுபவத்தை இந்த காலகட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இந்த அரசாணை அனைத்து அரசுப் பணியாளர்களையும் அகம் குளிரச் செய்துள்ளது என்று சட்டமன்ற செயலக நிருபர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 55ஆக இருந்தது. 55 வயதை 58ஆக உயர்த்தி அப்போதிருந்த அரசு உத்தரவிட்டது. 1979-ம் ஆண்டில் இருந்து இதுவரை 41 ஆண்டுகள் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58ஆக இருந்து வந்தது.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.