ஊரடங்குக்கு பின் வெளியே வந்த வெளிநாட்டினரின் அனுபவங்கள்; அந்த 46 நாட்கள் போதும் என அமெரிக்க பெண் உருக்கம்

ஊரடங்குக்கு பின் வெளியே வந்த வெளிநாட்டினரின் அனுபவங்கள்; அந்த 46 நாட்கள் போதும் என அமெரிக்க பெண் உருக்கம்
May 04 10:59 2020 Print This Article

பீஜிங்,

ஊரடங்கு என்ற வார்த்தை, இந்தியாவில், காஷ்மீர் மாநிலம் மூலம்தான் இந்தியர்களுக்கு அதிகளவில் அறிமுகம். அங்குதான் பல நேரங்களில் ஊரடங்கு போடப்பட்டிருப்பது கடந்த கால வரலாறு. மற்றபடி நாட்டின் பிற பகுதியினருக்கு ஊரடங்கு என்பது கேள்விப்பட்ட வார்த்தை மட்டும்தான். இப்போதுதான் அதுவே 40 நாட்களைக் கடந்து வாழ்க்கையாகி இருக்கிறது. இது தற்போதைய கணக்குபடி மொத்தம் 54 நாட்கள்… இது முடியுமா, தொடருமா என்பதை இப்போது நிர்ணயித்து சொல்லி விட முடியாது.

ஆனால் மக்களுக்கு இந்த ஊரடங்கு அயர்ச்சியை, தளர்ச்சியை மனதளவில், உடலளவில் தருகிறது என்பதை உலகின் மற்ற நாடுகளைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அமெரிக்கா தொடங்கி ஐரோப்பா, ஆசியா உலகின் பல கண்டங்களில் உள்ள மக்களும் தங்கள் பகுதிகளில் கொரோனா வைரசின் ஆதிக்கம் குறைய குறைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட, வீட்டை விட்டு வெளியே வர தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த வைரஸ் தோன்றிய சீனாவில் மக்கள், கொரோனா வைரசுக்கு எதிரான படையெடுப்பை முடித்துக்கொண்டு, இப்போது உற்சாகமாக சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத்தொடங்கி உள்ளனர். அதுவும் மே தினத்தையொட்டி 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருப்பது சீன மக்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது. முதல் 2 நாட்களில் மட்டும் பீஜிங் நகர பூங்காகளுக்கு 17 லட்சம் மக்கள் சென்றிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஷாங்காய் நகர சுற்றுலா தலங்களுக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றிருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டிலும், அமெரிக்காவின் தென் மாகாணங்களிலும் முக கவசம் அணிந்து கொண்டு கடற்கரைகளில் ஓடுகிறார்கள்.

கொரோனாவின் தொற்றுமையமாக அமெரிக்காவில் பார்க்ககூடிய நியூயார்க் நகர மத்திய பூங்காவில் மக்கள் இப்போது ஜாக்கிங் போக தொடங்கி இருக்கிறார்கள். நியூயார்க்கின் அண்டை மாகாணமான நியூஜெர்சியில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு தன் கணவருடன் வந்த மார்கி ரோபக் என்ற பெண், “46 நாட்கள் வீட்டில் அடைபட்டுக்கிடந்தது போதும்” என்று உருக்கமுடன் குறிப்பிட்டார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் நின்று போராடுகிற சுகாதார பணியாளர்களின் பணியை போற்றுகிற விதத்தில் அமெரிக்க கடற்படை, விமானப்படை போர் விமானங்கள் அட்லாண்டா, பால்டிமோர், வாஷிங்டன் டி.சி., நகரங்களில் வானில் வட்டமிட்டு பறந்தபோது அவற்றை பார்க்க மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.

ஸ்பெயினில் மார்ச் 14-ந் தேதி போடப்பட்ட ஊரடங்குக்கு பின்னர் இப்போதுதான் மக்கள் வெளியே வருகின்றனர். பார்சிலோனாவை சேர்ந்த கிறிஸ்டினா என்ற பெண், “இப்போதுதான் நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். கொஞ்சம் சோர்வாக இருப்பது வேறு விஷயம். ஒரு மாதத்துக்கு மேலாக நான் என் வடிவத்திலேயே இல்லாமல் போய்விட்டேன்” என்று குறிப்பிட்டார்.

அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ், மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும், கொரோனா வைரஸ் ஸ்பெயினில் 25 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோரை கொன்றிருக்கிறது. தடுப்பூசி கண்டுபிடித்து சந்தைக்கு வரும்வரையில் மீண்டும் இந்த வைரஸ் பரவும் ஆபத்து இருக்கிறது. நாம் உத்தரவாதம் அளிக்க வேண்டியது, நமது தேசிய சுகாதார அமைப்பை ஆபத்தில் கொண்டு போய் விடாமல் இருப்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்கிறது ஒரு தரப்பு. மற்றொரு தரப்போ எச்சரிக்கையுடன் நகரவேண்டும் என்கிறது. இப்படி மாறுபட்ட கருத்து எழுந்துள்ள நிலையில் இன்று அங்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இது தொடர்பான அனல்பறக்கும் விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ரஷியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் கொடி கட்டி பறக்க ஆரம்பித்திருக்கிறது. சனிக்கிழமை ஒரே நாளில் 1,300 பேரை கொரோனா வைரஸ் வரிந்துகட்டிக்கொண்டு தாக்கியது. அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளத்த தயார். ஆனால் டாக்டர்கள் சிவப்புக்கொடி உயர்த்துகிறார்கள். ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் நிலை உருவாகி விடும் என அவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.

ரஷியாவில் 1¼ லட்சம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே பலி அதிகமாக நேர்ந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. பலருக்கு பரிசோதனை செய்யாமலேயே மரணம் நேரிட்டிருக்கிறது.

இந்தியாவிலும் இயல்பு நிலைக்காய் மக்கள் காத்திருக்கிறார்கள். சுற்றுலா தலங்கள் மக்களின் வருகைக்காய் தவமாய் தவம் இருக்கின்றன. வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த 46 நாட்கள் போதும் என்று நியூஜெர்சி மாகாண பெண் மார்கி ரோபாக் சொன்னது போன்ற நிலைக்குத்தான் இப்போது இந்தியர்களும் தள்ளப்பட்டு வருகிறார்கள் என்பது இங்கு கோடிட்டு காட்டத்தகுந்தது.!

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.