சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவுக்கு காரணம் என்ன?- முழுத்தகவல்

சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவுக்கு காரணம் என்ன?- முழுத்தகவல்
April 25 14:47 2020 Print This Article

சென்னை:

சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29-4-2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும். இதேபோன்று, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 28-4-2020 செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பொதுமக்கள் இன்று அதிக அளவில் காய்கறி சந்தைகள், மளிகை கடைகளில் குவிந்து வருகின்றனர். வரும் 4 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இன்று ஒரு நாளே கடைசியாக இருப்பதனால், கடைகளுக்கு செல்லும் மக்கள், சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற முடியாத சூழல் எழுந்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் நோய் தொற்றின் மூலம் தெரியாத பாதிப்புகள் அதிகமாக இருப்பதே முழு ஊரடங்கு விதிக்க காரணம் என கூறப்படுகிறது.

சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அதாவது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் 25% சென்னையில் உள்ளது.

அடுத்து கோவையில் 134 பாதிப்புகளும் திருப்பூரில் 110 பாதிப்புகளும் உள்ளன. இந்த மூன்று மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக தான் இருந்து வருகிறது.

ஆனால், மதுரையில் இது வரை 52 பேரும், சேலத்தில் 29 பேரும் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநகராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருகிறது. அதே நேரம் இந்த மாவட்டங்களை விட அதிக பாதிப்பு கொண்ட திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்படவில்லை.

எனவே அதிக பாதிப்புகள் என்ற அடிப்படையில் இல்லாமல், நோய் தொற்றுக்கான காரணம் தெரியாமல் பாதிப்புகள் அதிகம் உள்ள ஊர்களில் முழு ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னையின் முதல் பாதிப்பு மார்ச் 18ம் தேதி கண்டறியப்பட்டது. கோவையின் முதல் பாதிப்பு மார்ச் 23-ம் தேதியும் திருப்பூரின் முதல் பாதிப்பு மார்ச் 25-ம் தேதியும் கண்டறியப்பட்டது. மதுரை மற்றும் சேலத்திலும் கூட மார்ச் 25-ம் தேதி தான் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது.

தமிழகத்தின் முதல் இறப்பு மதுரையில் பதிவானது. மரணமடைந்த 54 வயது நபரின் குடும்பத்திலேயே அடுத்த இரண்டு பாதிப்புகளும் கண்டறியப்பட்டன. அவருக்கு ஒரே தொற்றின் மூலமாக வந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறதே தவிர யாரிடமிருந்து எப்படி வந்தது என்று உறுதியாக இன்னும் சுகாதாரத்துறையால் கூற முடியவில்லை. 22-ம் தேதி உயிரிழந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் பூசாரியின் தாயாருக்கு எங்கிருந்து தொற்று வந்தது என்று தெரியவில்லை.

வெளிநாடு, வெளிமாநிலம் எங்கும் செல்லாத சென்னையில் தற்போது குணமடைந்துள்ள இயற்கை மருத்துவருக்கு தற்போது வரை எங்கிருந்து தொற்று வந்தது என தெரியவில்லை. கே.கே.நகரில் ஒரு மளிகைக்காரருக்கு, அலுவலகத்துக்குள் பணியாற்றும் செய்தியாளர் ஒருவருக்கு, ஆலந்தூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ ஒருவருக்கு என பலருக்கு நோய்த் தொற்றின் காரணம் தெரியவில்லை.

சேலத்தின் முதல் பாதிப்பு நான்கு இந்தோனேசியர்களும் அவர்களுக்கு வழிகாட்டியாக சென்ற சென்னை நபருமே. சேலம் அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று சேலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளச்சியில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொற்றுக்கான காரணம் தெரியவில்லை.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து 11-ம் தேதிக்குள் மதுரையை தவிர மற்ற நான்கு மாவட்டங்களில் பாதிப்புகள் பல மடங்காகியுள்ளன.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.